எலுமிச்சை அளவு சாதம் நீதிக் கதை
ஒரு ஊரிலே கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான், எச்சில் கையால் கூட காக்கா ஓட்ட மாட்டான். அவன் ஒரு நாள் சந்தைக்கு சென்றான். வெகு நேரமாக சந்தையில் சுற்றியதால் அவனுக்கு பசி அதிகமாகி விட்டது. அவனால் பசிய அடக்க முடியவில்லை.
ஒரு கடையில் எலுமிச்சை அளவு சாதம் ரூ.20 என்ற விளம்பர பலகை ஒன்றை பார்த்தான். அவனுக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது ஆனால் காசு செலவு செய்வதற்கு மனம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே உணவகத்தில் நுழைந்து விட்டான், அதற்குள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமும் தீட்டி விட்டான்.
உள்ளே சென்று எலுமிச்சை அளவு சாதம் ஒன்று கொடுங்கள் என்றான், உணவு வந்தது, சாப்பிட்டு முடித்தவுடன் உணவக முதலாளியிடம் சென்றான். சாப்பாட்டிற்கு காசு கேட்டார் முதலாளி, அதற்கு அந்த கஞ்சன், நீங்கள் தான் என்னை ஏமாற்றி விட்டீர்கள் எலுமிச்சை அளவு சாதம் கொடுப்பதாக சொல்லிவிட்டு சிறிய அளவில் சாதத்தை கொடுத்து விட்டீர்கள், ஒரு சாதம் கூட எலுமிச்சை பழம் அளவில் இல்லை, இதற்காக நீங்கள் தான் எனக்கு நஷ்ட ஈடாக பணம் தர வேண்டி இருக்கும் என்றான். உணவக முதலாளி ஒரு நொடி திகைத்து நின்று விட்டார் , அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இந்த விவகாரம் அந்த ஊர் பஞ்சாயத்திற்கு சென்றது. பஞ்சாயத்து தலைவர் நடந்ததை இரண்டு தரப்பிடமும் நன்றாக விசாரித்தார், தவறு யார் செய்தார் என்றும், அந்த கஞ்சன் வியாயாரியை ஏமாற்றுகிறான் என்றும் புறிந்து கொண்டார், அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டார். உணவக முதலாளியை அழைத்து ஒரு கிண்ணம் சாதம் கொண்டு வரசொன்னார், அதில் எலுமிச்சம் பழம் அளவிற்கு சதத்தை கையால் உருண்டையாக பிடித்தார் மொத்தம் 10 உருண்டை வந்தது.
அந்த கஞ்சனை அழைத்தார் அவர் உனக்கு தரவேண்டியது எலுமிச்சை அளவு சாதம் தானே என்று கேட்டார். ஆமாம் என்றான் கஞ்சன். அவர் பிடித்து வைத்த உருண்டையை காண்பித்து உனக்கு சேர வேண்டியது இதில் ஒன்று மட்டும் தான், ஆனால் நீயோ மொத்தம் 10 எலுமிச்சை அளவு சாதத்தை சாப்பிட்டுவிட்டாய், அதற்கான கட்டணம் 200 மற்றும் பஞ்சாயத்திற்கு 100 மொத்தம் 300 ரூபாயை கொடுத்து விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும், இல்லை என்றால் 300 சாட்டையடி வாங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
ஏமாற்ற நினைத்த கஞ்சன் ஏமாந்து போய் சாட்டை அடிக்கு பயந்து 300 ரூபாயை பஞ்சாயத்தில் கட்டி விட்டு வீட்டிற்கு திரும்பினான்.
நீதி : நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால் அதைவிட கூடுதல் வினை நமக்கே வந்து சேரும்.
No comments:
Post a Comment